தாவீதை மக்கள் தொகைக் கணக்கெடுக்கும்படி ஏவியது தேவனா? சாத்தானா? - 2 சாமுவேல் 24:1 மற்றும் 1 நாளாகமம் 21:1 வசனங்கள் முரண்படுகிறதா?

தாவீதை மக்கள் தொகைக் கணக்கெடுக்கும்படி ஏவியது தேவனா? சாத்தானா? - 2 சாமுவேல் 24:1 மற்றும் 1 நாளாகமம் 21:1 வசனங்கள் முரண்படுகிறதா?

வேதாகமத்தை கவனமாக வாசிக்காததால், சரியான புரிந்துகொள்ளுதல் இல்லாததால் இந்தக் கேள்வி வருகிறது. 

2 சாமுவேல் 24:1 இல் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது கர்த்தர் ஏவினார் என்று அவ்வசனத்தில் இருப்பதுபோல் தெரியாது. "கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்."

ஆனால் ஆங்கிலத்திலும் தமிழின் பிற மொழிபெயர்ப்பிலும் வாசிக்கும்போது கர்த்தர் தான் தாவீதை தூண்டினார் என்று வருகிறது. 

👉🏼 In English 
...he (God) moved David against them to say, “Go, count Israel and Judah”.

👉🏼 In other Tamil translation (Roman Catholic Bible)
...அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் (ஆண்டவர்) தாவீதிடம், “புறப்பட்டுப் போய் இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்” என்று தூண்டிவிட்டார்.

இதைப் பார்த்தவுடன் நாம் குழம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

2 சாமுவேல் 24வது அதிகாரம் முதல் வசனம் ஆரம்பிக்கும்போதே "கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது..." என்று சொல்கிறது. அதாவது கர்த்தரின் மனநிலை எவ்வாறு இருந்தது என்று சொல்லும் தொனியில் ஆரம்பிக்கிறது. ஆனால் 1 நாளாகமம் 21: 1 சாத்தான் என்ன மனநிலையில் இருந்தான் என்றும் சாத்தனின் பங்கு இந்த சம்பவத்தில் என்ன என்பதை வெளிப்படுத்தும் தொனியில் ஆரம்பிக்கிறது..."சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது."

இதில் தாவீதை ஏவினது கர்த்தரா அல்லது சாத்தானா? என்று கேட்டால் இது இரண்டுமே உண்மைதான். 

எப்படியென்றால், முதலாவது நாம் புரிந்துகொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், தேவன் ஒருபோதும் தீமையினால் ஒரு மனிதனை சோதிக்கமாட்டர் என்று வேதாகமம் தெளிவாகச் சொல்கிறது. யாக்கோபு 1:13..."தேவன் பொல்லாங்கினால்  சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல ". கர்த்தர் நம்மை பரீட்சித்துப் பார்ப்பார் (Test) ஆனால் தீமையைக் கொடுத்துச் சோதிக்க மாட்டார் (Temptation)... Test is different from Temptation.

பொல்லாப்பு, தீமையான சோதனையை சாத்தான் கொண்டு வருவான். இதை புரிந்துகொள்ள லூக்கா 22:31 இல் இயேசு சொன்னதைக் கவனிப்போம். பின்னும் கர்த்தர்: “சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.”

இங்கு இயேசுவின் சீடர்களைச் சோதிப்பதற்குக் கூட சாத்தான் செயல்பட்டான், ஆனால் சுயமாக அதை செய்ய முடியாது, அந்த அதிகாரம் அவனுக்கு இல்லை. சாத்தான் உத்தரவு கேட்டதாக அந்த வசனத்தில் இயேசு தெளிவாகச் சொல்கிறார். யாரிடம் உத்தரவுக் கேட்டு வருவான்? இதை புரிந்துகொள்ள யோபுவின் புத்தகம் 1 & 2 வது அதிகாரத்தை வாசிக்கும்போது அங்கு சாத்தான் யோபுவைச் சோதிக்க கர்த்தரிடத்தில் அனுமதி கேட்டதாகவும் கர்த்தர் அனுமதிக் கொடுத்ததாகவும் உள்ளது. 

அதேதான் இந்த இரண்டு வசனங்களிலும் நடந்துள்ளது. நாளாகமம் புத்தகம் சொல்லுகிறபடி தாவீதைப் பாவம் செய்ய வைப்பதற்காக சாத்தான்தான் ஏவினான். ஆனால் எப்படி ஏவினான் என்றால் கர்த்தரின் அனுமதியோடு ஏவினான். அதைதான் சாமுவேல் புத்தகம் கர்த்தர் ஏவியது போல் சொல்கிறது, சாமுவேல் புத்தகம் நாம் ஏற்கனவே சொன்னதுபோல் கர்த்தரின் மனநிலை எவ்வாறு இருந்தது என்னும் நோக்கத்தில் எழுதுவதால் கர்த்தரின் பங்கு இந்த சம்பவத்தில் எவ்வாறு இருந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு காரணம் இரண்டும் ஒரே சம்பவம்தான் ஆனால் வேறு வேறு கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் யார் ஏவினது என்ற விசயத்தை பொறுத்தவரை இரண்டு புத்தகமும் முழுமையான தகவலைச் சொல்லவில்லை, அதனால் இரண்டு புத்தகமும் ஒரே சம்பவத்தின் இரண்டு விதமான  தகவல்களை தருகிறது. அதனால் இந்த இரண்டையும் சேர்த்துதான் படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது கர்த்தர் இவ்வாறு ஏவுவாரா என்று புரிந்துகொள்ள வேதாகமத்தின் மற்ற பகுதியில் கடவுள் மற்றும் சாத்தானின் குணத்தைக் குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை தெரிந்து இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும். முழுமையான தகவல் இல்லாத சம்பவத்தில் வாசித்தவுடன் கற்பனையான முடிவுக்கு போகக்கூடாது. இதுதான் வேதாகமத்தின்படி சரியான புரிந்துகொள்ளுதல். 

ஆகவே, கர்த்தர் நேரடியாக தாவீதை ஏவவில்லை, சாத்தானுக்கு ஏவுவதற்கு அனுமதிக் கொடுத்ததால் சாமுவேல் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கர்த்தரின் அனுமதியோடும் கர்த்தரின் முழு அதிகாரத்தோடும் இந்த சாத்தானின் ஏவுதல் நடந்ததால் கர்த்தர் ஏவியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கர்த்தர் ஏவச் சொல்லி சாத்தான் இதை செய்யவில்லை என்பதும், கர்த்தர் தீமை செய்வதற்கு சாத்தானைப் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சாத்தான் இதை செய்ய நினைத்தான் ஆண்டவர் அனுமதி மட்டுமே கொடுத்தார். இந்த தீமையான காரியத்தை செய்ய ஆண்டவர் அனுமதி கொடுக்கலாமா?  என்று நீங்கள் கேட்கலாம்.

இவ்வாறு அவர் சாத்தானுக்கு அனுமதி கொடுப்பதின் மூலம் நம்மை நமக்கு யார், என்ன நாம் செய்துகொண்டிருக்கிறோம், நாம் செய்துவரும் பாவம் என்ன, ஆண்டவரின் பக்கம்தான்  இருக்கிறோமா என்பதை நமக்கு உணரச் செய்கிறார். இதில் தாவீதும் கூட தன்னுடைய பாவத்தை உணர்ந்து ஆண்டவரின் பக்கம் திரும்பினார். சாத்தானின் இந்த சதி திட்டத்தைக் கூட கடைசியில் நமக்கு கர்த்தர் நன்மையாகவும் ஆசிர்வாதமாகவும் மாற்றிவிடுகிறார். கர்த்தர் என்றுமே நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற நோக்கம் உடையவர் அல்ல. இதில் முரண்பாடு எதுவும் இல்லை, ஒரே சம்பவத்தின் இரு வேறு பகுதிகளே!

Post a Comment

0 Comments