அன்பான கடவுளிடமிருந்து இதுபோல் கொடூரமான தண்டனைக்குரியக் கட்டளை வருமா? லேவியராகமம் 20:13

அன்பான கடவுளிடமிருந்து இதுபோல் கொடூரமான தண்டனைக்குரியக் கட்டளை வருமா? லேவியராகமம் 20:13

லேவியராகமம் 20:13 இல் ஆணும் ஆணும் (Gay) தவறான உடலுறவில் இருந்தால் அவர்களைக் கொலைச் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் சொல்கிறது. "ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக."

கர்த்தர் அன்பான கடவுள் என்று சொல்கிறீர்கள், ஆனால் இவ்வாறு கொடூரமான தண்டனையை அவர் கொடுப்பாரா? அது உண்மையாகவே அன்பான கடவுளின் கட்டளையாக இருக்குமா? என்று கேட்கிறார்கள்.

👉🏼 முதலில் இது தனி நபருக்கான சட்டம் அல்ல, இஸ்ரவேல் என்னும் ஒரு நாட்டின் சட்டம் (Civil law of Israel). அப்போது இஸ்ரவேல் நாடு Theocracy ஆட்சியின் கீழ் இருந்தது. Theocracy என்றால் கடவுள் அல்லது ஒரு கடவுளின் பெயரால் ஆட்சி செய்யும் ஒரு அரசாங்க அமைப்பு. தற்போது இந்தியாவில் உள்ளது போல் மக்களாட்சி (Democracy) இல்லை. மேலும் உலகிலுள்ள பிற நாடுகள் Autocracy முறையையும் பின்பற்றுகிறது. ஆகையால் அந்தந்த நாடு என்ன ஆட்சி முறையைப் பின்பற்றுகிறதோ அதற்கேற்பதான் சட்டங்களும் அமையும்.

இங்கு இஸ்ரவேல் நாட்டை தேவனே நேரடியாக மோசேயின் குடும்பத்தின் மூலம் ஆட்சி செய்து வந்தார். அதனால் அது Theocracy ஆட்சி முறையில் இருந்தது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சட்டம் நமக்கான சட்டமோ, கிறிஸ்தவர்களுக்கான சட்டமோ இல்லை, உலகத்தின் பிற நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட சட்டமும் இல்லை. 

👉🏼 இரண்டாவது, தேவன் அன்புள்ளவர் என்பது 100 சதவீதம் உண்மைதான் ஆனால் அதே நேரத்தில் அந்த தேவன் பரிசுத்தர், நீதியுள்ளவர், பாவம் செய்யும்போது தண்டிக்கிறவர் என்றும் பைபிள் சொல்கிறது. 

🎯 பரிசுத்தர் (லேவியராகமம் 19:2, ஏசாயா 6:3, 1 பேதுரு 1:15-16)
🎯 நீதியுள்ளவர் (உபாகமம் 32:4, சங்கீதம் 11:7, சங்கீதம் 145:17)
🎯 பாவம் செய்யும்போது தண்டிக்கிறவர் (ரோமர் 6:23, நாகூம் 1:3, எபிரேயர் 10:30–31, கலாத்தியர் 6:7)

இவ்வாறு பரிசுத்தமுடைய, நீதியுள்ள கடவுள் நேரடியாக ஆட்சி செய்யும் நாட்டில் (Theocracy), அவர் பாவம் செய்கிறவர்களுக்கு தண்டனைக் கொடுக்காமல் விட்டால் கடவுள் அநீதியானவராக ஆகிவிடுவார் அல்லவா? எல்லாரும் பாவம் செய்துகொண்டே இருப்பார்கள் அல்லவா? உலகத்தில் சொல்லப்படுகிற பிற கடவுள் எப்படி என்று தெரியாது, ஆனால் பைபிள் சொல்லுகிற இந்த யெகோவா (YHWH) என்னும் பெயரை உடைய கடவுள் மிக பரிசுத்தமானவர் என்பதால் பாவம் செய்கிறவர்களைப் பார்த்துவிட்டு தண்டனைக் கொடுக்காமல் விட மாட்டார். அதனால்தான் அந்த நாட்டிற்கு இந்த சட்டத்தைக் கொடுக்கிறார். நாட்டிற்கு சட்டம் என்பது அவசியம் ஆனால் அந்த சட்டம் யார் எழுதுகிறார்கள் என்பதும் அவசியம். ஏன் மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் கூட இன்னும் LGBTQ சரி என்று சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை? மக்களாட்சி நடக்கும் இந்தியாவிலேயே Gay உறவுமுறை சரி என்று அங்கீகரிப்பதற்கு இவ்ளோ பிரச்சனை இருக்கிறதே? இந்தச் செயலைப் பாவம் என்று சொல்லும் கடவுள் எப்படி அதை அங்கீகரிக்கப்பார்?

மனிதனுடைய பார்வையில் இது சரியா தவறா என்பதல்ல, கடவுளின் பார்வையில் இது சரியா தவறா என்பதே முக்கியம். ஆகையால் தன்னை வணங்கும் மக்களும் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று விரும்பிய கடவுள், தனது ஆட்சிக்கு கீழ் இருக்கும் நாடு பாவம் இல்லாததாக இருக்க வேண்டும் என்று நோக்கமுடைய கடவுள் இவ்வாறு ஒரு தண்டனைச்சட்டத்தை நாட்டிற்கு கொடுக்கிறார். இதில் இந்த கடவுள் நீதியுள்ளவர் என்று தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.



Post a Comment

0 Comments