முதலாவது இந்த வசனத்தை புரிந்து கொள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 சுவிசேஷங்கள் என்ன நோக்கத்தில் எழுதப்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இந்த மத்தேயு சுவிசேஷம் மத்தேயு என்பவரால் இயேசுவே வாக்குத்தத்தம் செய்யப்பட்ட யூத மக்களின்/ இஸ்ரவேல் மக்களின் மேசியா என்பதையும் இயேசுவே தேவனுடைய உண்மையான குமாரன் என்பதையும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுபவர் என்பதையும் ஆணித்தரமாக யூத மக்களுக்கு தெளிவுபடுத்தப் பிரத்தியேகமாக எழுதினார்.
பகவத்கீதையில் இந்த அத்தியாயத்தில் இந்த ஸ்லோகம் இவ்வாறு சொல்கிறது என்று கிறிஸ்தவர்களிடம் சொன்னால் பகவத்கீதை படிக்காத கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு ஒன்றும் புரியாதோ, அதேபோல்தான் யூதர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதிய மத்தேயு சுவிசேஷத்தை யூதர்கள் அல்லாத பிற மக்கள் குழுவினர் இதை படிக்கும்பொழுது புரிந்துகொள்ள கடினமாக இருக்கும், முரண்பாடு இருப்பது போல் தோன்றும். அதனால்தான் பிற மக்களையும் கருத்தில்கொண்டு அவர்கள் புரிந்து கொள்ளுமாறும் பிற சுவிசேஷங்கள் ஆவியானவரின் தூண்டுதலின்படி எழுதப்பட்டது.
மத்தேயு 2:5 இவ்வாறு சொல்கிறது
"எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."
இந்த தீர்க்கதரிசனம் ஓசியா 11:1 இல் உள்ளது. "இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்"
ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஓசியா 11வது அதிகாரம் முழுவதும் ஏற்கனவே எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து ஆண்டவரால் விடுதலையாக்கப்பட்டு வெளியேறிய இஸ்ரவேல் மக்களைக் குறித்து பேசுகிறது. 'குமாரன்' என்பது 'இஸ்ரவேல் மக்களைக்' குறிக்கிறது. அப்படியானால் மத்தேயு இதை தவறாக இயேசுவுக்கு பொருத்த முயற்சிக்கிறாரா? நிச்சயமாக இல்லை.
ஓசியாவில் சொல்லப்பட்டது இயேசுவைக் குறித்த தீர்க்கதரிசனம் என்று மத்தேயு இங்கு சொல்லவரவில்லை மாறாக ஓசியாவின் வசனங்களை ஒப்பீடு செய்து அது இயேசுவுக்கு பொருந்துகிறது என்பதை யூத மக்களுக்கு உணர்த்தி, அவர்தான் உண்மையான தேவனுடைய குமாரன், அவர்தான் மேசியா என்பதை தெளிவுபடுத்துவதற்காக அதை Typology என்ற முறையைப் பயன்படுத்தி ஒப்பீடு மட்டுமே செய்கிறார். அதாவது ஓசியாவின் வசனங்களை ஒப்பிடுவதன் மூலம் இயேசுதான் மேசியா என்பது நிறைவேறும்படி இவ்வாறு நடந்தது என்று சொல்லுகிறார். இது மொழிபெயர்ப்பாலும் நமது தவறான புரிந்துகொள்ளுதலினாலும் வந்த பிரச்சனை.
டைபாலஜி (Typology) என்பது வேதாகம விளக்க முறைகளில் ஒன்றாகும். பழைய ஏற்பாட்டில் உள்ள ஒரு உண்மையை,
பின்னர் வரும் வேதாகமப் பகுதிகளில் ஒப்பீடு செய்து இன்னும் ஆழமான மற்றும் முழுமையான அர்த்தத்துடன்நிறைவேறுவதாகக் காணும் விளக்க முறையாகும். இந்த வகையான விளக்கம் செய்யும் முறை வேதாகமத்தில் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது.
இந்த முறையை மத்தேயு முறையாகக் கையாண்டுள்ளார் என்பதே உண்மை. ஆகவே இந்த வசனத்தில் எந்த ஒரு முரண்பாடும் எந்த ஒரு போலியான விடயமும் இல்லை. மத்தேயு யூதர்களுக்கு அவர்களுடைய பாணியில் புரியுமாறு இந்த விளக்கமுறையை பயன்படுத்தி ஒப்பீடு செய்தாரே தவிர அது இயேசுவைக் குறித்த தீர்க்கதரிசனம் என்று சொல்லவரவில்லை. இதை யூதர்கள் அல்லாத பிற மக்கள் வாசிக்கும்போது இந்த விளக்க முறை தெரியாததனால், இந்த நோக்கத்தில் இந்த புத்தகத்தை படிக்காத காரணத்தால் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து அதற்கு கீழுள்ள பிற வசனங்களிலும் இந்த முறையை கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே மத்தேயு போலியானவர் அல்ல. மத்தேயு சுவிசேஷம் நம்பகத்தன்மை வாய்ந்தது. முரண்பாடு இல்லாதது.
0 Comments