இந்த வசனத்தை அரைகுறையாக வாசித்ததால் வந்த பிரச்சனை இது.
உபாகமம் 22 வது அதிகாரத்தில் 22 முதல் 30 வரையிலுள்ள வசனங்களில் ஐந்து விதமான பாலியல் ஒழுக்கக் கேடுகளும் அதற்கான தண்டனைகளும் விளக்கப்பட்டுள்ளது. அதில் 4வதுதான் இங்கு விமர்சிக்கப்படுகிறது.
👉🏼 உபாகமம் 22:28-29..."நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது."
இந்த வசனம் கற்பழிப்பு குறித்த வசனம் இல்லை. இது சில மொழிப்பெயர்ப்பால் வந்த குழப்பமே. இதற்கு மேலுள்ள வசனங்களை வாசிக்கவும் (உபாகமம் 22:25), அதில்தான் கட்டாயமான கற்பழிப்பை பேசுகிறது, அவனுக்கு மரணதண்டனை கொடுக்கச் சொல்கிறது..."ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்."
ஆனால் 28, 29 இல் சொல்லப்பட்ட வசனம் கட்டாயமான கற்பழிப்பைக் குறித்து பேசவில்லை (Not about Rape), மாறாக இருவரும் சம்மதத்துடன் திருமணத்திற்கு முன்பே செய்யும் பாலியல் உடலுறவைப் பற்றிப் பேசுகிறது (Consensual sex).
🎯 வசனம் 25 இல் வரும் 'பலவந்தமாய்ப் பிடித்து' என்ற வார்த்தைக்கு மூல மொழியாகிய எபிரேயத்தில் Chazaq (Strong No: 2388) என்று வருகிறது இதுதான் Forcible Rape (கட்டாயமான கற்பழிப்பு). ஆனால் விமர்சனத்திற்கு உள்ளான 28, 29 வது வசனத்தில் வரும் 'கையைப் பிடித்து' என்று வரும்போது எபிரேயத்தில் Taphas (Strong No: 8610) என்ற வேறொரு வார்த்தை வருகிறது. இதற்கு லேசாக அல்லது கவனமாக, மெல்லிசாக பிடித்தல் என்று பொருள். அதனால் இந்த வசனம் அந்த ஆணும் பெண்ணும் விருப்பத்தோடு செய்யும் பாலியல் உடலுறவு ஆகும்
🎯 இதை உறுதிப்படுத்தும்படியாக அதே 28 வது வசனத்தில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறது..."அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் (they are discovered)"
ஏன் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது? கற்பழித்த அந்த நபரை கண்டுபிடித்ததாக சொல்லி இருக்கலாமே? அதற்கு காரணம் இது இரண்டு பேரும் விருப்பத்தோடு செய்வது ஆகும். பிறகு ஏன் தமிழில் அதை கற்பழிப்பு என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்றால் (Note: எல்லா மொழிபெயர்ப்பிலும் அவ்வாறு இல்லை) அவர்கள் இருவருடைய பார்வையில் அது விருப்பத்தின்படியான உடலுறவு என்றாலும், சட்டத்தின்படியும் கலாச்சாரத்தின்படியும் திருமண உறவிற்கு வெளியே இவ்வாறு நடப்பதை கற்பழிப்பாகவே காட்டப்படுகிறது. ஆனால் உண்மையாகவே அங்கே Rape நடக்கவில்லை என்பது முக்கியமான ஒன்று.
🎯 அது மட்டுமல்ல, இந்த சட்டங்களை ஏற்கனவே யாத்திராகமத்தில் ஆண்டவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு சேர்த்து ஒப்பிட்டுதான் இதை படிக்க வேண்டுமே தவிர, இதை மாத்திரம் தனியாக உருவிப் படிக்கக் கூடாது.
யாத்திராகமம் 22:16-17..."நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன். அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்."
அப்படியென்றால் இந்த விசயத்தில் முழுமையான தகவல் என்னவென்றால்
⏩ இது கட்டாயப்படுத்தப்பட்ட கற்பழிப்பு அல்ல.
⏩ கற்பழித்தவன் 50 வெள்ளிக் காசை பரிசமாகக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த காலத்து மதிப்புப்படி இது கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. இது மிகப்பெரிய அபராதம் ஆகும். ஆகையால் இந்த காரியத்தை செய்வதற்கு முன் இதை யோசித்துப் பார்த்தாலே இந்த முறைகேடு நடைபெறாது.
⏩ இந்த முறைகேடான சம்பவம் நடந்த பிறகு பெற்றோரின் சம்மதம் கேட்கப்படுகிறது. விருப்பம் இருந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும். கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் சம்மதம் கேட்கத் தேவையில்லை, காரணம் ஏற்கனவே விருப்பப்படிதான் உடலுறவு நடைபெற்றது. மேலும் இப்போதுள்ள கலாச்சாரத்தோடு ஒப்பிடக் கூடாது. அப்போது பொதுவாக பெற்றோரின் சம்மதம் பிள்ளைகளுக்கும் சம்மதமே.
⏩ ஒருவேளை திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டால் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள்.
⏩ திருமணம் செய்துகொண்ட பின்பு கடைசிவரைக்கும் விவாகரத்து (Divorce) செய்யக்கூடாது.
இவ்வாறு கடுமையான நிபந்தனைகள் இருப்பதால் இந்த மாதிரியான முறைகேடான செயல்கள் பெரும்பாலும் நடைபெறாது. அவ்வாறு நடைபெற்று இந்த வசனங்கள் அடிப்படையில் தண்டனைக் கொடுக்கப்பட்டதாக பைபிளில் இல்லை. இவ்வகையான சட்டங்கள் இஸ்ரவேல் நாட்டிற்கு கொடுக்கப்பட்டாலும் அதை நிறைவேற்றும் நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும், நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்படும், அதுவே இறுதியானது என்பது முக்கியமானது.
👉🏼 ஆகையால் இந்த வசனங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் அதிக பாதுகாப்பை தருவதற்குதான் இந்த சட்டம் வழி வகுக்கிறது என்பது முக்கியமானது.
0 Comments