பழைய ஏற்பாட்டில் தேவனை முகமுகமாய் மக்கள் பார்த்ததாக சொல்கிறது ஆனால் புதிய ஏற்பாடு பார்க்க முடியாது என்று சொல்கிறது, இந்த முரண்பாடு ஏன்?

பழைய ஏற்பாட்டில் தேவனை மக்கள் முகமுகமாய் பார்த்ததாக சொல்கிறது ஆனால் புதிய ஏற்பாடு பார்க்க முடியாது என்று சொல்கிறது, இந்த முரண்பாடு ஏன்? தேவனை பார்க்க முடியுமா முடியாதா?

வேதாகமத்தை சரியாக வாசிக்காததினால் இந்தக் கேள்வி வருகிறது. அங்கும் இங்கும் ஒரு சில வசனத்தை மட்டும் உருவி தவறாகப் புரிந்துகொள்வதே இதற்கு காரணம். வசனத்திற்கு மேலும் கீழும் மற்றும் முந்தைய அதிகாரம் என்ன சொல்கிறது என்பதையும் வாசிக்க வேண்டும்.

இந்தக் கேள்விக்கு பின்வரும் 4 வசனங்களை பயன்படுத்துகிறார்கள். 

1️⃣ ஆதியாகமம் 32:30
2️⃣ யாத்திராகமம் 24: 9,10,11 
3️⃣ 1 தீமோத்தேயு 6: 16
4️⃣ யோவான் 1:18
இதனை ஒவ்வொன்றாக கவனிப்போம்.

1️⃣ ஆதியாகமம் 32: 30 இல் யாக்கோபு தேவனை முகமுகமாய்க் கண்டதாக சொல்கிறது. "அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்."

ஆனால் உண்மையாகவே இங்கு யாக்கோபு தேவனின் முழு மகிமையான உருவத்தைப் பார்த்தாரா? இல்லை. கொஞ்சம் மேலுள்ள வசனங்களை வாசிக்கும்போது யாக்கோபு யாரைப் பார்த்ததால் இந்த வார்த்தையை சொன்னார் என்றால், வசனம் 24 யாக்கோபு சந்தித்தது ஒரு புருஷன் (a man) என்று சொல்கிறது, ஆனால் அந்தப் புருஷன் தெய்வத்தன்மை உடையவர் என்றும் அந்தப் பகுதிகள் உறுதி செய்கிறது. இதை வலுவூட்டும் விதமாக ஓசியா 12:3-5 ஆகிய வசனங்கள் அங்கு மனித உருவத்தில் வந்தவர் கர்த்தருடைய தூதனானவர் என்றும் அவர் பெயர் யேகோவா என்றும் உறுதிப்படுத்துகிறது. ஆகையால் அங்கு வந்த அந்த மனிதர் வேறு யாரும் இல்லை யேகோவா தேவன் தன்னை யாக்கோபு பார்க்கும் விதத்தில் அவருக்கு வெளிப்படுத்தினார் என்பதே. 

தேவன் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்துவதை Manifestation என்று சொல்கிறோம். அதேபோல் தற்காலிகமாக தன்னை மனிதர்கள் பார்க்கக்கூடிய வகையில் வெளிப்படுத்துவதை Theophany என்று சொல்கிறோம். தேவன் தன்னை மனிதன் தாங்கக்கூடிய/ பார்க்கக்கூடிய ஒரு வடிவில் வெளிப்படுத்துகிறார். அவ்வாறே இந்தப் பகுதியிலும் யாக்கோபுக்கு வெளிப்படுத்தினார். இது கடவுளின் முழு மகிமையைப் பார்த்ததாக சொல்லவில்லை. 
 
2️⃣ யாத்திராகமம் 24:9,10,11 இல் குறிப்பாக 10 வது வசனம் "இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது." என்று சொல்கிறது. 

ஆனால் இங்கும் அவர்கள் தேவனின் முகத்தைப் பார்த்ததாகவோ, முழு வெளிப்பாட்டையும் பார்த்ததாகவோ வசனம் சொல்லவில்லை. தேவனைத் தரிசித்தார்கள் (Saw a God) என்று வாசித்தவுடனே தேவனை முழுமையாகப் பார்த்தார்கள் என்று நாமாகவே கற்பனை செய்யக்கூடாது. "நான் சென்னையில் மெரினாக் கடலைப் பார்த்தேன்" என்று சொன்னால் அந்தக் கடலின் அனைத்து எல்லைகளையும் ஒரே இடத்தில் நின்று பார்த்துவிட்டேன் என்று அர்த்தமில்லை, நான் நின்ற பகுதியில் என்னால் எவ்வளவு பார்க்க முடிந்ததோ அவ்வளவாகப் பார்த்தேன் என்பதே அதன் பொருள். 

ஏனென்றால் அதே யாத்திராகமம் 33:20 இல் என்னுடைய முகத்தைப் பார்க்க முடியாது என்று நேரடியாக தேவனே சொல்கிறார். "நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்."

ஆகையால் அந்த மக்கள் தேவனுடைய முழு வெளிப்பாட்டைப் பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

3️⃣ இதைத்தான் 1 தீமோத்தேயு 6: 16 இல் பவுல் தெளிவுப்படுத்துகிறார். "...மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்..."

அதாவது மனிதரில் இதுவரை யாரும் அவருடைய முழு தன்மையையும் அல்லது முழு உருவத்தையும் அல்லது முழு வெளிப்பாட்டையும் பார்த்ததில்லை என்கிற அர்த்தத்தில் சொல்கிறார்.

4️⃣ யோவான் 1:18 வசனமும் இன்னும் இதை உறுதிப்படுத்துகிறது. "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்."

இங்கு யோவானும் தேவனை முழுமையாக யாரும் பார்த்ததில்லை ஆனால் இயேசு அவரை தன் மூலமாக வெளிப்படுத்துகிறார் (Theophany) என்பதை தெளிவுப்படுத்துகிறார்.

🎯 ஆகையால் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் எந்த விதத்திலும் முரண்படவில்லை. தேவனை முழுமையாக யாரும் பார்க்க முடியாது என்ற அர்த்தத்தில் புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் தெளிவாக ஒரே கருத்தை தான் சொல்கிறது. ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவனை பார்த்த மக்கள் அவரை முழுமையாக பார்க்கவில்லை என்பதே உண்மை.



Post a Comment

0 Comments